செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ்நாடு - சமச்சீர் கல்வி எப்போது?

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க.
தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சித்திட்டங்களிடைய
'சமச்சீர் கல்வி' முதலிய நல்ல திட்டங்கைளயும் கொண்டுவந்தது.
மக்களிடையே மலிந்து கிடக்கும் வேற்றுமைகளை களைய
வேண்டிய கல்விமுறையே மைய அரசுக் கல்வி, மாநில அரசுக் கல்வி,
ஆங்கிலோ இந்தியன் முறை, பதின்மப்பள்ளி (மெட்ரிகுலேசன்)
முறை எனப் பல்வேறு வேற்றுமைகளில்சிக்கித் தவிக்கிறது. இவ்
வேற்றுமைகளை களைந்து ஒரே வகையான கல்வியை அந்தந்த
வட்டாரத்தில் உள்ள கைத்தொழிலுடன் கற்றுக்கொடுப்பதே
சமச்சீர் கல்வி முறையாகும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி அமைச்சரை அமர்த்திய
தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ச.
முத்துக்குமரன் தலைமையில் குழுவை அமைத்தது. அவர் அறிக்கை
வழங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னமும் சமச்சீர் கல்வி
நடைமுறைக்கு வரவில்லை. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த
வேண்டிய அரசு, அதை விடுத்து செயல் வழிக்கற்றல் முதலிய புதிய முறைகளை செயல்படுத்தி வருகிறது. இதையும் தாண்டி ஒரு படி மேலாக முத்துகுமரனின் அறிக்கையை ஆராய இன்னொரு
குழுவை அமைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அரசின்
இச்செயல் பதின்மப்பள்ளி நடத்துவோரின் வஞ்சகப் பிடியில்
கல்வித்துறை சிக்கிவிட்டேதா என்ற ஐயத்தை மக்களிடையே
ஏற்படுத்தியிருக்கிறது . அந்த ஐயத்தைப் போக்கி , வரும்
கல்வியாண்டிலாவது சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
- திருக்குறள் வினைசெயல்வகை

நன்றி: ungalkural@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக