புதன், 14 ஏப்ரல், 2010

யாருக்கு என்ன பயன்...?

நாம் படித்த படிப்பு, செய்யும் தொழில், வாழும் வாழ்க்கைஇதனால் எங்கு யாருக்கு என்ன பயன் இருக்கிறது? என்ற தேடலுக்கு முற்பட்டேன்.


சென்ற வாரம் ஒரு நாள் என் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி பழுது அடைந்தது. சமீபகாலத்தில் தான் பெட்டி சீர் செய்யப்பட்டது. மறுபடியும் பெட்டி தகராறு செய்தது வீட்டில் உள்ளவர் அனைவரயும் எரிச்சல் அடைய செய்தது. குறிப்பாக, என் அம்மாவை.. சமையல் முடித்தவுடன் சிறிது நேரம் பெட்டியை ஓடவிட்டு கண் அயர்வாள். சென்னை வெயிலில் அலுவல் அலைச்சலும் சமையல் குளைச்சலும் வாட்டி எடுக்கையில் குளிர்சாதன பெட்டி இல்லாமல் நிம்மதியான உறக்கமும் இல்லை அம்மாவுக்கு. ஏலேக்ட்ரிசியானை போன் செய்தது சீர் செய்ய அழைக்கையில் அவன் இருப்பு வேலையை முடித்து வருவதிற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்று கூறியது இன்னும் எரிச்சல் கிளப்பியது. மூன்று நாள் கடந்து ஏலேக்ட்ரிசியன் பெட்டியை சீர்பார்க்கையில் முந்தைய வேலையினால் சிறு கோளாறு அடைந்தது. உடனே அதை சீராக்கிவிட்டு கொடுத்தான். வேலை செய்தமைக்கு பணமும் வாங்க மறுத்தான். அம்மா முகத்தில் நிம்மதி பெருமூச்சு. அம்மா அடையும் நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் அவனது வேலை பயன்பட்டதை பார்த்து அவனை பொறாமை கொண்டேன். அவன் புன்முறுவலுடன் விடைபெற்று விரைந்தான். நாம் என்ன வேலை செய்தாலும் யாருக்கு ஏதேனும் பயன் பட்டதா என்று நினைத்து பார்த்தால் எதுவும் தோன்றவில்லை...
வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வந்தது ...


"அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன்னோய்போற் போற்றா க்கடை"

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தண்டவாளம் கடக்கும்போது கவனம் தேவை...!!!



தண்டவாளம் கடக்கும்போது கவனம் தேவை...!!!



குரோம்பேட்டை வாசியாக நான் புறநகர் பயணத்திற்கு தொடர்வண்டியை தான் பெரிதும் நாடுவேன். தொடர்வண்டி நிலையத்தை அடைய நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் சந்தினை கடந்து செல்வேன். வழியிலேயே தடம் மாறி தண்டவாளத்தின் மேல் நடக்க தொடங்கி விடுவேன். பலருக்கும் உரிய அதே குறுக்கு வழியில் கடக்கும் எண்ணம் தான்.. ஆனால், இங்கே தான் ஆபத்து தொடங்குகிறது. சிறு கவனம் சிதறுதல் கூட உயிரை பறித்துவிடும். சென்ற வாரம் இரண்டு அடுத்தடுத்து விபத்துகளை நேரில் பார்த்து மிகவும் அச்சமடைந்தேன். அன்றுமுதல் தண்டவாளம் கடந்து செல்வதை தவிர்ப்பது என்று முடிவெடுத்தேன். செல்பேசி, பண்பலை வானொலி போன்றவைகளை தண்டவாளம் கடக்கும்போது அறவே தவிர்க்கவேண்டும். படித்தவர்கள் பலர் கூட இந்த தவறினை செய்வது மகிழ்ச்சி அளிக்கவில்லை. உடலும் உயிரும் நமக்கு உரித்தாய அறிய பொக்கிசமாகும். அதை பாதுகாப்பது அவரவர் தலையாய பொறுப்பு. இது போன்ற சிறு கவனக்குறைவால் பேரிழப்பு நிகழாமல் இருப்பின் நனி நன்று.

அறிவியல் - எதிர்திசையில் ஓடிய ஆறு...!!!

எதிர்த் திசையில் ஓடிய ஆறு
- இலொகு

ஓடிக் கொண்டு இருந்த ஆறு எதிர்த்திசையில் ஓடியது என்பதை
கேள்விபட்டிருக்கிறீர்களா ? 1811ஆம் ஆண்டுதான் வியப்பூட்டும் இந்நிகழ்வு நடந்தது. அது ஏன் எதிர்த் திசையில் ஓடியது என்று அறிவதற்கு முன் நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது எனத்தெரிந்து கொள்வோம் . நான்கைந்து நாணயங்கைள ஒன்றன்மீது ஒன்றாக வையுங்கள் . அடியில் உள்ள நாணயத்தைத் நகர்த்திப் பாருங்கள். மேல் உள்ள நாணயங்கள் இலேசாக நகரும் அல்லவா? இதே தான் புவியிலும் ஏற்படுகிறது. புவியின் அடியில் உள்ள நிலத்தட்டுகள் நகர்வதால் மேல் பகுதியில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இவ்வதிர்வுகைள ரிக்டர் அளவால் குறிக்கிறார்கள்.

சம்மு காசுமீர், இமாசலம், ஆகிய வட மேற்கு மாநிலங்கள் சீனாவில் நகரும் நிலத்தட்டுகளால் பாதிக்கப்படுகின்றன. வரலாற்று அடிப்படையில் சப்பான், சீனா, திபெத்து , ஈரான் ஆகிய இடங்கள் வலுக் குறைந்த இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

நில நடுக்கம் வரப் போவதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இயலுமா? நில நடுக்கத்திற்கு முன் சில நிகழ்வுகள் வைத்து நில நடுக்கம் வரப் போவதை அறியலாம். ஆனால் முன் கூட்டியே துல்லியமாகக் கணிப்பது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

2004ஆம் ஆண்டு இந்தோனேசியா ஒட்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா வரை தாக்கியதை நாம் அறிவோம். இது போன்ற ஒரு நில நடுக்கம் அமெரிக்க லூசினியா பகுதியில் நியூ மாட்ரிட் நகரில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது தான் அங்கிருந்த 'மிசிசிப்பி' ஆறு எதிர்த் திசையில் ஓடியது .

தமிழ்நாடு - சமச்சீர் கல்வி எப்போது?

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க.
தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சித்திட்டங்களிடைய
'சமச்சீர் கல்வி' முதலிய நல்ல திட்டங்கைளயும் கொண்டுவந்தது.
மக்களிடையே மலிந்து கிடக்கும் வேற்றுமைகளை களைய
வேண்டிய கல்விமுறையே மைய அரசுக் கல்வி, மாநில அரசுக் கல்வி,
ஆங்கிலோ இந்தியன் முறை, பதின்மப்பள்ளி (மெட்ரிகுலேசன்)
முறை எனப் பல்வேறு வேற்றுமைகளில்சிக்கித் தவிக்கிறது. இவ்
வேற்றுமைகளை களைந்து ஒரே வகையான கல்வியை அந்தந்த
வட்டாரத்தில் உள்ள கைத்தொழிலுடன் கற்றுக்கொடுப்பதே
சமச்சீர் கல்வி முறையாகும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி அமைச்சரை அமர்த்திய
தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ச.
முத்துக்குமரன் தலைமையில் குழுவை அமைத்தது. அவர் அறிக்கை
வழங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னமும் சமச்சீர் கல்வி
நடைமுறைக்கு வரவில்லை. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த
வேண்டிய அரசு, அதை விடுத்து செயல் வழிக்கற்றல் முதலிய புதிய முறைகளை செயல்படுத்தி வருகிறது. இதையும் தாண்டி ஒரு படி மேலாக முத்துகுமரனின் அறிக்கையை ஆராய இன்னொரு
குழுவை அமைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அரசின்
இச்செயல் பதின்மப்பள்ளி நடத்துவோரின் வஞ்சகப் பிடியில்
கல்வித்துறை சிக்கிவிட்டேதா என்ற ஐயத்தை மக்களிடையே
ஏற்படுத்தியிருக்கிறது . அந்த ஐயத்தைப் போக்கி , வரும்
கல்வியாண்டிலாவது சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
- திருக்குறள் வினைசெயல்வகை

நன்றி: ungalkural@gmail.com